திருக்குறள் - 734     அதிகாரம்: 
| Adhikaram: naatu

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

குறள் 734 - திருவள்ளுவர் - ThiruValluvar

"urupasiyum ovaap piniyum serupakaiyum" Thirukkural 734 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உறுபசியும் -கடும்பசியும்; ஓவாப் பிணியும் - தீரா நோயும்; செறு பகையும் - அழிக்கும் பகையும்; சேராது இயல்வது நாடு - இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக் கேற்ற ) நல்ல நாடாம். 'உறுபசி' உழவரின்மையாலும் நீர் வளம் நிலவளமின்மையாலும் நேர்வது. 'ஓவாப்பிணி' நிலக்கேட்டாலும் நச்சுக்காற்றாலும் தட்ப வெப்ப மிகையாலும் நுகர்ச்சிப் பொருள் தீமையாலும் நேர்வது. 'செறுபகை' அரசனாற்றலும் நல்லமைச்சும் படைவலியும் அரண்வலியும் துணைவலியும் இன்மையால் நேர்வது. இக்குறைகளும் கேடுகளும் இன்றேல் அவற்றால் விளையும் தீங்குகளும் இல்லை என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீர்க்க முடியா பசியும், அழிக்க முடியா நோயும், தணிக்க முடியா பகையும் சேர்த்துக் கொள்ளாது இருப்பது நாடு.

Thirukkural in English - English Couplet:


That is a 'land' whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.

ThirukKural English Meaning - Couplet -Translation:


kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

ThiruKural Transliteration:


uRupasiyum Ovaap piNiyum seRupakaiyum
saeraa thiyalvadhu naadu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore