Kural 813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uRuvadhu seerdhookkum natpum peRuvadhu
koLvaarum kaLvarum naer.

🌐 English Translation

English Couplet

These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train.

Explanation

Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

2 மணக்குடவர்

நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.

3 பரிமேலழகர்

உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர். (நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.) .

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உறுவது சீர்தூக்கும் நட்பும் - நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகரிரும்; கள்வரும் - பிறர்கேட்டையும் அவர் படுந்துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும்; நேர் - தம்முள் ஒத்தவராவர். தந்நலமே கருதிப் பிறர்பொருளை வஞ்சித்துப் பெறுதலில் மூவரும் ஒத்தலின் ' நேர் ' என்றார். ' நட்பு' ஆகு பொருளி.

5 சாலமன் பாப்பையா

இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.

6 கலைஞர் மு.கருணாநிதி

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

என்ன பயன் என்று சீர்தூக்கிப் பார்க்கும் நண்பரும், இலாப நேக்கில் செயல்படுபவரும், திருடரும் சமமானவர்களே.

More Kurals from தீ நட்பு

அதிகாரம் 82: Kurals 811 - 820

Related Topics

Because you're reading about Bad Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature