"utravan theerppaan marundhuzhaich chelvaanendru" Thirukkural 950 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
மருந்து - நோய்க்குச் செய்யும் மருத்துவம்; உற்றவன் - நோயாளி; தீர்ப்பான்- மருத்துவன்; மருந்து- அவனுக்குக் கருவியாகிய மருந்து அல்லது மருத்துவமுறை; உழைச்செல்வான்- அவனுக்குத் துணைவனாயிருந்து நோயாளியிடம் சென்று மருந்து கொடுப்பவன்; என்று அப்பால் நால் கூற்றே- என்ற அப்பகுதிப்பட்ட நான்கு திறத்ததே. உற்றவன் திறமாவன; நோய்நிலை யுணர்த்தல்; மருத்துவன் சொற்கடைப்பிடித்தல், பொருளீதல், மருத்துவத்துன்பம் பொறுத்தல் என்பன. நோய் தீர்ப்பான் திறமாவன. நோயாளியிடத் திரக்கமுடைமை, நோய் நீக்குங் குறிக்கோளுடைமை, பரந்த மருத்துவக் கல்வி, மதிநுட்பம், நீடிய பட்டறிவு, பேராசையின்மை என்பன. இவற்றுள் பட்டறிவின் இன்றியமையாமை "இளங்கணியன் முது மருத்துவன்," ("வாலிப சோதிடன் வயோதிக வைத்தியன்.") "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்" " ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை மருத்துவன்" என்பவற்றால் அறியப்படும். ஆயிரம் வேர் என்றது வேரின் வகையையே யன்றித் தொகையை யன்று, "நோயாளி ஊழாளி(விதியாளி) யானால் மருத்துவன்(பரிகாரி) பேராளி." ஆதலால், ஆயிரம்பேரைக் கொன்றவன் என்பதாற் பெரிதும் இழுக்கும் இழிவும் இல்லையென்க. மருந்தின் திறமாவன. உடற் கூற்றோடொத்தல்,ஊறு செய்யாமை, ஆற்றலுடைமை, எளிதிற் பெறப்படுதல் என்பன. உழைச்செல்வான் திறமாவன; மருத்துவன் சொன்ன வண்ணஞ் செய்யுந் திறமை, நோயாளியிடத் தன்புடைமை, இன்சொலனாயிருத்தல், உண்மையுடைமை என்பன. இவையெல்லாங் கூடியவழி யல்லது நோய் தீராமையின். 'அப்பானாற் கூற்றே மருந்து' என்று தேற்றேகாரங்கொடுத்துக் கூறினார். 'உற்றவன்' 'தீர்ப்பான்' என்னும் இரண்டிற்கு முரிய செயப்படு பொருள் முந்திய குறளினின்று வந்தது. உழைச்செல்வான் மருந்துகொடுப்பனாக மட்டுமன்றிச் செய்பவனாகவுமிருந்தால், மேலை முறை மருத்துவமனையிலுள் கலக்கு நரினும் (Compounder) மருத்துவ அறிவாற்றலிற் சிறந்தவனாவன். 'அப்பானாற் கூற்று' என்பதற்கு "நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது," என்று உரையும்,"நான் கென்னுமெண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பா' லென்றொழிந்தார்.' என்று சிறப்பும் கூறினார் பரிமேலழகர். அது பொருந்தாமை, "அவற்றுள் அ இ உ எ ஒ என்னும் அப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழத் தென்ப." (3) " ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள என்னும் அப்பா லேழும் ஈரள பிசைக்கும் நெட்டெழத்தென்ப," (4) என்னும் தொல்காப்பிய நூற்பா யாப்பை நோக்கி யுணர்க. இனி இவ்வதிகாரம் முழுதும் ஆயுள்வேதம் என்னும் ஆரிய மருத்துவ நூன்முறையைத் தழுவியதாகப் பரிமேலழகர் ஆங்காங்கு உரைத்திருப்பது, உண்மைக்கு நேர்மாறாம்; ஆரியர் வருமுன் வடநாவலத்திலும் பனிமலைவரை தமிழரும் திரவிடருமே மிகுதியாய்ப் பரவியிருந்தனரென்றும், வடநாட்டுச் சித்த மருத்துவமே பிற்காலத்தில் ஆயுள் வேதமெனப் பெயர் மாற்றப்பட்ட தென்றும், இது பழந்தமிழிசையே இன்று பாகுபாடும் குறியீடுகளும் மாற்றப்பட்டுக் கருநாடக சங்கீதம் என வழங்குவது போன்ற தென்றும், அறிந்துகொள்க.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என்று நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.
Thirukkural in English - English Couplet:
For patient, leech, and remedies, and him who waits by patient's side,
The art of medicine must fourfold code of laws provide.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.
ThiruKural Transliteration:
utravan theerppaan marundhuzhaich chelvaanendru
appaal naaRkootrae marundhu.