உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர்.
Transliteration
uvandhuRaivar uLLaththuL endrum ikandhuRaivar
Edhilar ennum-iv voor.
🌐 English Translation
English Couplet
Rejoicing in my very soul he ever lies;
'Her love estranged is gone far off!' the village cries.
Explanation
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
2 மணக்குடவர்
அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - என் காதலர் எப்போதும் என் உள்ளத்துள் மகிழ்ந்து வதிகின்றார் ; ஏதிலர் இகந்து உறைவர் என்னும் இவ்வூர் - இதனை யறியாது . அவர் அன்பிலரென்றும் , பிரிந்து வேறிடத்து வதிகின்றாரென்றும் , பழித்துரைக்கும் இவ்வூர் .
5 சாலமன் பாப்பையா
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.
7 சிவயோகி சிவக்குமார்
விருப்பமுடன் எனது உள்ளத்தில் என்றும் இருக்கிறார் பிரிந்து இகழ்ந்து இருக்கிறார் என்று பழிக்கும் இவ்வூர்.
8 புலியூர்க் கேசிகன்
எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், ‘பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர்’ என்று இவ்வூர் அவர் மேல் பழி கூறுகின்றதே!
More Kurals from காதற்சிறப்புரைத்தல்
அதிகாரம் 113: Kurals 1121 - 1130
Related Topics
Because you're reading about Excellence of Love