உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.
Transliteration
uyarvakalam thiNmai arumai-inh naankin
amaivaraN endruraikkum nool.
🌐 English Translation
English Couplet
Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.
Explanation
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
2 மணக்குடவர்
உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.
3 பரிமேலழகர்
உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உயர்வு அகலம் திண்மை அருமை-உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் அருமையும்; இந்நான்கின் அமைவு-ஆகிய இந்நான்கு திறமும் அமைந்திருப்பதே; அரண் என்று நூல் உரைக்கும்-சிறந்த மதிலரண் என்று அரசியல் பற்றிய பொருள்நூல் கூறும். பாம்புரியோடு கூடிய கோட்டைமதில் அகழியை அடுத்த தென்பதை, "கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் னீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்." என்பதனாலும் (கலி. 47), "அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப் பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக் கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகை பொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே." 'உயர்வு' அமைந்தது மரவேணியும் நூலேணியுங்கொண்டு ஏறமுடியாத மதில். இது உவளகம் (உவணகம்) எனப்படும். உவள்=உவண் (உயர்ச்சி). "வன்சிறை யுவளகம் ஆரையும் வரையார்." (திவா. 5). 'அகலம்' அமைந்தது உழிஞையார் துளைக்க முடியாத அடியகலமும் நொச்சியார் நின்று அம்பெய்யக்கூடிய தலையகலமு முள்ள மதில். இது எயில் (எய்இல்) எனப்படும். 'திண்மை' அமைந்தது செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டிய மதில். இது இஞ்சி எனப்படும். இஞ்சுதல் இறுகுதல். "செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை" (புரம். 201) "செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி" (கம்பரா. கும்ப. 160.) அருமை அமைந்தது பல்வகைப் பொறிகள் கொண்டதாய்ப் பகைவர் அணுகமுடியாத மதில். இது சோ எனப்படும். "சோ வரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த" (சிலப், க ஏ: 35) மதிற்பொறிகளாவன: "...........வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்." (சிலப். கரு : 207-214). இவற்றுள் பிற என்றவை நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப் பொறி, புலிப் பொறி, குடப் பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியன ( உரை). 'அமைவு' ஆகுபெயர். நூலோர் செயல் நூலின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
உயர்வு, அகலம், திடம், அனைத்து தேவைகள பூர்த்தியாக்கும் அருமை, என நான்கும் அமையப்படுவதே அரண் என்று எடுத்துரைக்கும் அரணுக்கான நூல்.
More Kurals from அரண்
அதிகாரம் 75: Kurals 741 - 750