உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
Transliteration
uzhudhuNdu vaazhvaarae vaazhvaarmaR Rellaam
thozhudhuNdu pinsel pavar.
🌐 English Translation
English Couplet
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.
Explanation
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
2 மணக்குடவர்
உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
3 பரிமேலழகர்
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்- எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே, உரிமையுடன் வாழ்பவராவர்; மற்று எல்லாம் தொழுது உண்டு பின்செல்பவர்- மற்றோரெல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே. உழவர் தம் விருப்பப்படியும் பிறர் விருப்பப்டியும் தொழில் செய்பவர் என்பது கருத்து. இது மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்கு ஏற்காது. தொல்காப்பியர் காலத்தில் அஃறிணையைக் குறித்த எல்லாம் என்னும் சொல் திருவள்ளுவர் காலத்தில் உயர்திணையையுங் குறித்தது வழக்குப் பற்றிய திணை வழுவமைதி. ஏகாரம் பிரிநிலை.
5 சாலமன் பாப்பையா
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
7 சிவயோகி சிவக்குமார்
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.
8 புலியூர்க் கேசிகன்
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்.
More Kurals from உழவு
அதிகாரம் 104: Kurals 1031 - 1040
Related Topics
Because you're reading about Agriculture