"vaalpoala pakaivarai anjarka anjuka" Thirukkural 882 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவரை அஞ்சாதொழிக; புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக. இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக. (பகைவர் : ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பறறி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
வாள்போல் பகைவரை அஞ்சற்க- கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு அஞ்ச வேண்டுவதில்லை; கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக- ஆனால், உறவினர் போலிருந்து மறைவாகப் பகைக்கும் உட்பகைவரின் போலியுறவிற்கு மிகுதியாக அஞ்சுக. 'வாள்போல் பகைவரை யஞ்சற்க' என்றது, உட்பகைவர்க்கு அஞ்ச வேண்டிய அளவு வெளிப்பகைவர்க்கு அஞ்ச வேண்டா மென்னுங் கருத்தினதேயன்றி, அஞ்சவே வேண்டாமென்னுங் கருத்தினதன்று வெளிப்பகை முன்னறிந்து தடுக்கவும் தற்காக்கவும் ஏதுவாயிருத்தலானும், உட்பகை அங்ஙனம் முன்னறியவும் தப்பிக் கொள்ளவும் இடமின்றி அழிவைத் தருதல் உறுதியாதலானும், முன்னதற்கு 'அஞ்சற்க' என்றும், பின்னதற்கு 'அஞ்சுக' என்றும், கூறினார். வெளிப்பகையினும் உட்பகை மிகக் கொடிது என்பது கருத்து. 'பகைவர்' இரண்டனுள் முன்னது ஆகுபொருளது. இக்குறளால் உட்பகையினின்று விலகுதல் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராகவே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
வாள் போல் நேரடியாய் வெட்டி விழ்த்தும் பகைவருக்கு அஞ்ச வேண்டாம். அஞ்ச வேண்டும் நட்புடன் உறவாடும் பகைவருக்கு.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும்.
Thirukkural in English - English Couplet:
Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
ThiruKural Transliteration:
vaaLpoala pakaivarai anjaRka anjuka
kaeLpoal pakaivar thodarpu.