வானின் றுலகம் வழங்கி வருதலாற், றானமிழ்த மென்றுணரற் பாற்று.
Transliteration
Vaanin Rulagam Vazhangi Varudhalaal
Thaanamizhdham aendruNaraR Paatru.
🌐 English Translation
English Couplet
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Explanation
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
2 மணக்குடவர்
மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.
3 பரிமேலழகர்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.
4 ஞா. தேவநேயப் பாவாணர்
வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது. உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும். "இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம் 70). நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. ஆயினும், உயிர்கட்கெல்லாம் பிணிமூப்புச் சாக்காடிருத்தலால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கினவனைச் சாவினின்று தப்பினான் என்று கூறும் வழக்கைக் காண்க. அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும். அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம் "(மணி. 28: 116). அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர். நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர். மருமம் - (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு. பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடையொப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால். அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை (மரணத்தை)த் தவிர்ப்பது என்று பொருளுறுத்தி, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங் கட்டிவிட்டனர் வடமொழியாளர். இங்ஙனங்கட்டினும், மீண்டும் அது தென்சொல் திரிபேயாதல் காண்க. அல் (எதிர்மறை முன்னெட்டு) - அ. ஒ. நோ : நல் - ந. மடி - மரி - ம்ரு (வ.) - ம்ருத, ம்ருதி, ம்ருத்யு (சாவு). தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவரமுதம் என்னும் இல்பொருளை உவமையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென உணர்க.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உஉயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும்.
6 சாலமன் பாப்பையா
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
7 கலைஞர் மு.கருணாநிதி
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
8 சிவயோகி சிவக்குமார்
வெட்டவெளிருந்து பூமி தோன்றியதால் அதுவும் அழிவில்லாதது என்று உணரப்படும்.
9 புலியூர்க் கேசிகன்
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்.
More Kurals from வான்சிறப்பு
அதிகாரம் 2: Kurals 11 - 20
Related Topics
Because you're reading about Nature & Elements