"vaanoakki vaazhum ulakellaam mannavan" Thirukkural 542 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் . நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம். "நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால் , யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126) என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழும். குடிமக்கள் அரசனுடைய செங்கோலினை நோக்கி வாழ்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
வானத்தை எதிர்பார்த்தே உலகம் வாழும் அதுபோலவே ஆட்சியாளரின் ஆணையை எதிர்பார்த்தே குடிமக்கள் வாழ்வும் இருக்கும்.
Thirukkural in English - English Couplet:
All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all.
ThirukKural English Meaning - Couplet -Translation:
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
ThiruKural Transliteration:
vaanoakki vaazhum ulakellaam mannavan
koalnhoakki vaazhunG kuti.