Kural 1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vaazhvaarkku vaanam payandhatraal veezhvaarkku
veezhvaar alikkum ali.

🌐 English Translation

English Couplet

As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.

Explanation

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

2 மணக்குடவர்

காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இ-ரை,) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி-அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்துபோன கணவர் தம்மையின்றியமையாத மகளிர்க்கு, காலமறிந்து வந்து இன்புறுத்தும் பேரன்புக் கூட்டம்;வாழ்வார்க்கு வானம் பயந்த அற்று-தன்னையே நோக்கி வாழும் மாந்தருக்கு முகில் காலம் அறிந்து பெருமழை பொழிந்தாற் போலும். நம் காதலர் நம்மீது அன்புகொள்ளாமையால் அவர் வந்து கூடப்பெறாது, மழையின்றி வாடும் மாந்தர் போல வாடுகின்றோம் என்பதாம். ’ஆல்’ அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

வாழ்வதற்கு வானம் நன்மை பயப்பது போல் காதலில் வீழ்பவற்கு வீழ்பவரே நன்மை அளிக்கின்றார்கள்.

8 புலியூர்க் கேசிகன்

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர்வாழ்பவருக்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றது ஆகும்.

More Kurals from தனிப்படர்மிகுதி

அதிகாரம் 120: Kurals 1191 - 1200

Related Topics

Because you're reading about Excessive Longing

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature