Kural 552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vaelotu nindraan iduven Radhupoalum
koalodu nindraan iravu.

🌐 English Translation

English Couplet

As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

Explanation

The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

2 மணக்குடவர்

தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

3 பரிமேலழகர்

வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும். அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும் ; குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் . என்னும் குறிப்பிருத்தலால் , அவன் இரப்பதும் வழிப்பறிக்கள்வன் ஏவல் போன்றதே யென்றார் . 'வேலொடு நின்றான்' என்பதனால் வழிப்பறிக்கள்வன் தனியன் என்பதும் , 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்சொல்வோன் ஒன்றியென்பதும் , 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரியன்றென்பதும் பெறப்படும்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தண்டிக்கும் தொழிலோடு நின்ற அரசன் குடிமக்களிடம் பொருள் வேண்டிக் கேட்டல், வேற்படைகளுடனே தனியே நின்ற கள்வன் வழிப்போக்கனை நோக்கிக் கைப்பொருளினைத் 'தா' என்பதனோடு ஒக்கும்.

6 சாலமன் பாப்பையா

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

8 சிவயோகி சிவக்குமார்

கொலைக் கருவியைக் காட்டி கொடு என்பதைப் போன்றது ஆணைகள் கொண்டு மிரட்டும் ஆட்சியாளர்களின் கண்முடித்தனம்.

More Kurals from கொடுங்கோன்மை

அதிகாரம் 56: Kurals 551 - 560

Related Topics

Because you're reading about Cruel Rule

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature