Kural 363

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vaeNdaamai anna vizhuchchelvam eeNtillai
aaNdum aqdhoppadhu il.

🌐 English Translation

English Couplet

No glorious wealth is here like freedom from desire;
To bliss like this not even there can soul aspire.

Explanation

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

2 மணக்குடவர்

அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை. இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.

3 பரிமேலழகர்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை. (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தூய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம்; அது வாய்மை வேண்ட வரும் - அவ்வவா வில்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத்தானே வரும். அறியாமையும் அவாவும் முதலிய மாசுமறுவற்றதினால் வீட்டைத்தூய்மையென்றும் , கருமகத்தைக் கரணகமாக்கித் 'தூய்மையென்பது அவாவின்மை ' யென்றும், என்று முள்ள ஒரே மெய்ப் பொருள் பரம்பொருளாதலின் அதை வாய்மையென்றும், பரம்பொருளாற்பெறப்படும் சிறந்த பேரின்பத்தை நோக்கின் இழிந்த பிறவித்துன்பத்திற்கேதுவாகிய ஆசை நீங்குமாதலின் 'வாய்மைவேண்டவரும்' என்றுங் கூறினார். 'வாய்மை' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றிடைச்சொல். 'தூஉய்மை,' 'வாஅய்மை' இரண்டும் இசைநிறையளபெடை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

'எப்பொருளையும் விரும்பாமை' என்பதனை ஒக்கும் சிறந்த செல்வம் இவ்வுலகின் கண் இல்லை. அதுவேயன்றி எவ்வுலகிலும் அதனை ஓப்பது இல்லை.

6 சாலமன் பாப்பையா

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

7 கலைஞர் மு.கருணாநிதி

தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

8 சிவயோகி சிவக்குமார்

தேவையற்ற நிலைக்கு ஒப்ப சிறந்த செல்வம் இங்கு இல்லை வேறு எங்கும் அதற்க்கு ஒப்பானது இல்லை.

More Kurals from அவாவறுத்தல்

அதிகாரம் 37: Kurals 361 - 370

Related Topics

Because you're reading about Overcoming Desire

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature