திருக்குறள் - 265     அதிகாரம்: 
| Adhikaram: thavam

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

குறள் 265 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaendiya vaentiyaang keydhalaal seydhavam" Thirukkural 265 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலால் - தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய நிலைமையிருத்தலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும். 'ஈண்டு முயலப்படும் ' என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்பட்டது. 'வேண்டிய' என்றவை மண்ணின்பமும் விண்ணின்பமும் வீட்டின்பமு மாகிய மூவகை யின்பங்கள். இல்லறத்தாலும் இம் மூன்றையும் பெறலாம். இவ்விரு வழிகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்வது அவரவர் ஆற்றலையும் விருப்பத்தையும் பொறுத்தது. அன்புடைமை , விருந்தோம்பல் , நடுநிலைமை, ஒப்புரவறிதல் , ஈகை முதலிய அறங்கள் ஆரியர் மேற்கொள்ளுதற்கு அரியனவாகலின், அவர் துறவறத்தையே விரும்புவர். அதனாலேயே, "மேற்கதி வீடுபேறுகள் தவத்தானன்றி எய்தப்படா" என்றார் பரிமேலழகர் . கூடா வொழுக்கமும் போலித் துறவும் பூண்டு கொண்டே ஒருவன் மெய்த்துறவிபோல் நடிக்கலாம். இந்நடிப்பு இல்லறத்தில் இயலாது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறலாம் ஆனபடியால் செய்யப்படுவதாகிய தவம் இப்பிறப்பில் முயன்று செய்யப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தேவையை தேவைக்கு ஏற்றப்படி பெறுவதால் தவம்செய்ய இங்கே முயற்சிக்கப் படுகிறது.

Thirukkural in English - English Couplet:


That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).

ThiruKural Transliteration:


vaeNdiya vaeNtiyaang keydhalaal seydhavam
eeNdu muyalap padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore