"vaiththaanvaai saandra perumporul aqdhunnaan" Thirukkural 1001 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான். ('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனையிட மெல்லாம் நிறைதற்கேதுவான பெருஞ்செல்வத்தை ஈட்டிவைத்தும் ,கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன் , செத்தான் உடம்போ டுளனாயினும் செத்தவனாவன்; செயக்கிடந்தது இல் - அதைக்கொண்டு அவன் செய்யக் கிடந்ததொரு செயலுமில்லை. செல்வமிருந்தும் அதை நுகராமையால் , செத்தவனுக்கு ஒப்பாவன் என்பது கருத்து. ' வைத்தான் ' முற்றெச்சம். "உண்ணா னொளிநிற னோங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்." (நாலடி.9)
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
சொல்லமுடியா பெரும்பொருளை சேர்த்து வைத்தவர் அதை அனுபவிக்காமல் இறந்துவிட்டார் என்றால் அப்பொருளால் பயன் இல்லை.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.
Thirukkural in English - English Couplet:
Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.
ThirukKural English Meaning - Couplet -Translation:
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).
ThiruKural Transliteration:
Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan
Seththaan Seyakkitandhadhu Il.