திருக்குறள் - 897     அதிகாரம்: 

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

குறள் 897 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vakaimaanda vaazhkkaiyum vaanporulum ennaam" Thirukkural 897 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? (உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் செறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தகைமாண்ட தக்கார் செறின்- ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்ஆம் - ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே! படை,குடி,நாடு,கூழ்,அமைச்சு, அரண் என்பன ஆறுறுப்புக்கள். நட்பு என்பது அரசனின் வலிமையை மிகுப்பதேயன்றி நாட்டுறுப்பன்று. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்." (குறள்.158) என்று இல்லறத்திற்கும், "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை." (ஷ.310) "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்." ( .314) என்று துறவறத்திற்குங் கூறியிருப்பதால், 'செறின்' என்பது முற்றத் துறந்த முழு முனிவர் செறாமை தோன்ற நின்றது. 'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு னென்னாம்' என்றது, அருந்தவரின் பெருந்திறலை யுயர்த்தி அரசர் தம் செல்வச் செருக்கால் அவருக்குத் தவறு செய்யாதவாறு எச்சரித்ததே யன்றி வேறன்றென வுணர்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறப்பு வாய்ந்த வாழ்க்கையும், உயர்வான பொருளும், தகுதி படைத்த தக்காரின் செழுமைக்கு ஈடாகாது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


சாபமிடுதலும் அருள்செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால், பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் அழிந்து விடும்.

Thirukkural in English - English Couplet:


Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?.

ThiruKural Transliteration:


vakaimaaNda vaazhkkaiyum vaanporuLum ennaam
thakaimaaNda thakkaar seRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore