திருக்குறள் - 221     அதிகாரம்: 
| Adhikaram: eekai

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

குறள் 221 - திருவள்ளுவர் - ThiruValluvar

"variyaarkkondru eevadhae eekaimar" Thirukkural 221 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின் வைக்கப்பட்டது.) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம். குறியெதிர்ப்பாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொருளீறு. "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே".(928) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வளமற்றவர்களுக்கு உதவுவதே உதவி மற்றவை எல்லாம் குறிப்பறிந்து மீண்டும் பெரும் தன்மை உடையது.

Thirukkural in English - English Couplet:


Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

ThiruKural Transliteration:


vaRiyaarkkondru eevadhae eekaimaR Rellaam
kuRiyedhirppai neera thudaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore