Kural 1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vazhuththinaal thumminen aaka azhiththazhudhaal
yaarullith thummineer endru.

🌐 English Translation

English Couplet

She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'.

Explanation

When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?".

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.

2 மணக்குடவர்

யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள். இது தும்மினும் குற்றமென்று கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள். (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) தும்மினேனாக வழுத்தினான் - என்னொடு கூட இருந்தவள் யான் தும்மினேனாக வழக்கம்போல் ' நீடு வாழ்க ' என்று வாழ்த்தினாள் ; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றி, நும்மாற்காதலிக்கப்பட்ட மகளிருள் யார் நினைத்ததனால் தும்மினீர் என்று சொல்லி யழுதாள். அன்பரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மலெழும் என்பது மகளிர் குருட்டுக்கொள்கை. அதை மெய்ந் நெறிக் கொள்கையாகக் கொண்டு புலந்தாள் என்பதாம். வழுத்து என்னுஞ்சொல் வாழ்த்துதற்பொருளில், வந்தது. வாழ்த்துதலும் புலத்தலும் தம்முள் இயையாமையின், 'அழித்து ' என்றான்.

5 சாலமன் பாப்பையா

நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.

6 கலைஞர் மு.கருணாநிதி

தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ யார் உம்மை நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.

7 சிவயோகி சிவக்குமார்

வழக்கப்படி தும்மினேன் வாழ்த்தினாள் உடனே மாறி அழுதாள் யார் உம்மை நினைக்க தும்மினீர் என்று.

8 புலியூர்க் கேசிகன்

யாம் தும்மினேனாக ‘நூறாண்டு’ என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதை விட்டு, ‘எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர்’ என்று கேட்டுக் கேட்டு அழுதால்.

More Kurals from புலவி நுணுக்கம்

அதிகாரம் 132: Kurals 1311 - 1320

Related Topics

Because you're reading about Subtleties of Sulking

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature