வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.
Transliteration
VeeReydhi maaNdaar vinaiththitpam vaendhan-kaN
ooReydhi uLLap padum.
🌐 English Translation
English Couplet
The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.
Explanation
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
2 மணக்குடவர்
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.
3 பரிமேலழகர்
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
வீறு எய்திமாண்டார் வினைத்திட்பம்-சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட அமைச்சரின் வினைத்திண்மை;வேந்தன் கண் ஊறு எய்தி உள்ளப்படும்-பயனளவில் அரசனையடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும். பிறவிலக்கணங்கள் கச-ஆம் அதிகாரத்தில் முதல் ஆறு குறள்களிலுஞ் சொல்லப்பட்டனவாம். 'வேந்தன்க ணூறெய்தல்' - வினைத்திட்பத்தால் விளைந்த செல்வமும் புகழும் அரசனை யடைதல். ஊறெய்தல்-உறுதல். உறுவது ஊறு. உறுதல்-அடைதல்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
எண்ணத்தில் சிறப்புடைந்து மாட்சிமைப்பட்ட அமைச்சரது தொழில் வலிமையானது. வேந்தனிடத்தில் செல்வத்தினையும் புகழினையும் உண்டாக்குவதால் எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்.
6 சாலமன் பாப்பையா
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.
8 சிவயோகி சிவக்குமார்
வீரமுடன் போராடி இறந்தவரின் செயல்திறன் ஆட்சியாளரிடத்தில் ஊரார் சொல்லி சிறப்பாக எண்ணப்படும். குறிப்பு - செயலை திறமையுடன் செய்பவர் புகழ் இறந்தப்பின்னும் போற்றப்படும்.
More Kurals from வினைத்திட்பம்
அதிகாரம் 67: Kurals 661 - 670