Kural 1194

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

veezhap patuvaar kezhee-iyilar thaamveezhvaar
veezhap pataa-ar enin.

🌐 English Translation

English Couplet

Those well-beloved will luckless prove,
Unless beloved by those they love.

Explanation

Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

2 மணக்குடவர்

நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர். இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.

3 பரிமேலழகர்

('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(காதலரை யியற்பழித்த லஞ்சி அவரது அருளின்மையை மறைத்த நீ தெய்வக் கற்பினை யாதலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார்-கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப் படுவாரும் ; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர்-தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப்படாராயின் தீவினையாட்டியரே. தீவினையேற்கு அந்நன்குமதிப்பாற் பயனில்லை யென்பதாம். கெழீஇயின்மை நல்வினையின்மை. 'கெழீஇ' இன்னிசையளபெடை 'படாஅர்' இசைநிறையளபெடை. சிறப்பும்மை தொக்கது.

5 சாலமன் பாப்பையா

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.

6 கலைஞர் மு.கருணாநிதி

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

7 சிவயோகி சிவக்குமார்

காதலில் வீழ்பவர் நட்புக்கு உகந்தவராக ஏற்கமாட்டார்கள் தன்னால் ஒருவர் காதலில் விழ்ந்தும் தான் வீழப்படவில்லை என்றால்.

8 புலியூர்க் கேசிகன்

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப்படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம் மகளிர், முன்செய்த நல்வினைப் பயனை உடையவரே அல்லர்.

More Kurals from தனிப்படர்மிகுதி

அதிகாரம் 120: Kurals 1191 - 1200

Related Topics

Because you're reading about Excessive Longing

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature