வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.
Transliteration
veezhum iruvarkku inidhae vaLiyidai
poazhap padaaa muyakku.
🌐 English Translation
English Couplet
Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.
Explanation
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.
2 மணக்குடவர்
ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
3 பரிமேலழகர்
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
[இருவர்க்கும் இடையீடு படாத முயக்கு இல்லறத்திலேயே இயலுமென்று வரைவுகடாவின தோழிக்குச் சொல்லியது.] (நீ சொல்வ தொக்கும்;) வளி இடை போழப்படா முயக்கு - ஓருடம் பென்னுமாறு இறுக ஒன்றியமையால் காற்றா லிடையறுக்கப்படாத தழுவல் ; வீழும் இருவர்க்கு இனிதே - ஒரு வரை யொருவர் விழையும் இருவர்க்கும் இன்பந் தருவதே. தோழி நாளிடையீடு குறித்துச் சொன்னதற்கு மாறாகத் தலைமகன் காற்றிடையீடு குறித்துச் சொல்லியும் , அவள் உடம்பு பற்றி இருவர் எனக் கொண்டதை அவன் காதல் பற்றி உயிரால் ஒருவர் எனக் கொண்டு மறுத்தும் கோணை யுறழ் (வாதம்) செய்தவாறு. இதனால் வரைவுடம் படாமை தெரிவித்தான் முற்றுமை செய்யுளால் தொக்கது . ஏகாரம் தேற்றம் , ' படாஅ ' இசைநிறையளபெடை , வரைவு கடாதலாவது வெளிப்படையான கரணச்சடங்கொடு இல்லற வாழ்க்கை தொடங்குமாறு வேண்டுதல்.
5 சாலமன் பாப்பையா
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
காதலில் வீழும் இருவர்க்கு இனிமையானது காற்றும் இடை புகாத முயக்கம்.
8 புலியூர்க் கேசிகன்
காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும்!
More Kurals from புணர்ச்சிமகிழ்தல்
அதிகாரம் 111: Kurals 1101 - 1110
Related Topics
Because you're reading about Joy of Union