Kural 844

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

veNmai enappatuva thiyaadhenin oNmai
udaiyamyaam ennum serukku.

🌐 English Translation

English Couplet

What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'

Explanation

What is called want of wisdom is the vanity which says, "We are wise".

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

2 மணக்குடவர்

புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.

3 பரிமேலழகர்

வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வெண்மை எனப்படுவது யாது எனின்-புல்லறிவுடைமை யென்று சொல்லப்படுவது,என்னது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னுஞ் செருக்கு--அது யாம் விளங்கிய அறிவுடையேம் என்று தாமே தம்மை உயர்வாக மதிக்கும் மடம் பட்ட ஆணவம். 'வெண்மை' என்பது இங்கு விளையா மரம் போன்ற முதிரா அறிவு; பண்பாகுபெயர். ஒற்றுமைபற்றிக் காட்சிப் பொருளின் தன்மையாகச் சார்த்திக் கூறப்பட்டது. ஒண்மை ஒளியுடைமை;அதாவது விளங்கிய அல்லது தெளிந்த அறிவுடைமை. புறக்கண்ணிற்குப் பொருளை விளக்கும் ஒளிபோல் அகக் கண்ணிற்குப் பொருளை விளக்கும் அறிவு , புறவொளிக்கு இனமான அகவொளியாகக் கொள்ளப்பட்டது செருக்கு உண்மையொடு கூடியதும் கூடாததும் என இருவகைப்படும். ஒரு நல்லறிவாளன் தன்னை உயர்வாக மதிப்பது உண்மையொடு கூடியது ;ஒரு புல்லறிவாளன் அங்ஙனம் தன்னை மதிப்பது உண்மையொடு கூடாதது. இரண்டுங் குற்றமே. ஆயின் ,பின்னது இருமடிக் குற்றமாம். மேலையாரியர், சிறப்பாக அமெரிக்கர், யாம் அறிவியலைக் கண்டு வளர்த்தேமென்றும் , திங்களை யடைந்தேமென்றும், எல்லாத்துறையும் வல்லேமென்றும், தருக்கியும் செருக்கியும் வரலாற்று மொழிநூலைப் புறக்கணித்து, ஆரிய அடிப்படையில் வண்ணனை மொழி நூலை வளர்த்து வருவதும் வெண்மையின்பாற் பட்டதே.

5 சாலமன் பாப்பையா

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

7 சிவயோகி சிவக்குமார்

கூர்ந்த மதியின்மை எனப்படுவது என்ன என்றால் நுட்ப அறிவு உடையவன் நான் என்ற மதி மயக்கமே.

8 புலியூர்க் கேசிகன்

‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!.

More Kurals from புல்லறிவாண்மை

அதிகாரம் 85: Kurals 841 - 850

Related Topics

Because you're reading about Petty Mindedness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature