விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.
Transliteration
viliyumen innuyir vaerallam enpaar
aliyinmai aatra ninaindhu.
🌐 English Translation
English Couplet
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'.
Explanation
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
2 மணக்குடவர்
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
3 பரிமேலழகர்
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகன் தூதுவரக் காணாது வருந்துந் தலைமகள் வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாமிருவரும் வேறல்லமென்று சொல்லுவாரின் அன்பின்மையை மிகவும் நினைந்து; என் இன் உயிர் விளியும் - எனது இனிய வுயிர் இன்று என் உடம்பை விட்டுப் பெயர்கின்றது. காதலர் தப்பாது வருவர். ஆதலால் வருந்தாதேகொள் என்று வற்புறுத்திய தோழிக்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவினாலன்று, அவரன்பின்மை பற்றியே யென்று எதிரழிந்து கூறியவாறு. 'அளியின்மை' பிரிதலும் பிரிந்துவரவு நீடலும் தூதுவிடாமையுமாம்.
5 சாலமன் பாப்பையா
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
6 கலைஞர் மு.கருணாநிதி
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
7 சிவயோகி சிவக்குமார்
கேட்டுப் பார் என் உயிர் நீயின்றி வேறில்லை என்றவர் அதன்படி நடக்காததால் வழியின்றி தவிக்கிறேன் நினைத்து.
8 புலியூர்க் கேசிகன்
‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே.
More Kurals from நினைந்தவர்புலம்பல்
அதிகாரம் 121: Kurals 1201 - 1210
Related Topics
Because you're reading about Lamenting the Beloved