திருக்குறள் - 1268     அதிகாரம்: 
| Adhikaram: avarvayinvidhumpal

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

குறள் 1268 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vinaikalandhu vendreeka vaendhan manaikalandhu" Thirukkural 1268 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக. வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக. (மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்த விடத்துத் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்றீக- நம் வேந்தன் முனைந்து போர் புரிந்து வெல்வானாக; மனைகலந்து மாலை விருந்து அயர்கம்- யாமும் ஊர் சென்று மனைவியொடுகூடி அற்றை மாலைப் பொழுதின்கண் விருந்துண்டு மகிழ்வேம். வேந்தற் குற்றுழிப் பிரிவாவது, குறுநில வரசராகிய வேளிரும் மன்னரும் நம் தலைவராகிய வேந்தரென்னும் பெருநிலவரசர்க்குப் போர்வினை வந்த விடத்து, அவருக்குத் துணையாகச் செல்லுதல். 'மனை' ஆகுபெயர். வினைமுடியுமுன் கூறிய கூற்றாதலின் விதும்பலாயிற்று. "பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி யுரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க வென்றும். மனைகலந்தென்றும் மாலைப்பொழுதின் கண் விருந்தயர்க மென்றும், வந்த அவ்வுரை தானே அது கூடாமைக்குக் கரியாயிற்று." என்று பரிமேலழகர் கூறியிருப்பது சரியே. 'பிறரெல்லாம்' என்றது மணக்குடவ பரிதி காலிங்க பரிப்பெருமாளரை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயலில் ஈடுபட்டு வெற்றி பெறட்டும் நம் வேந்தன் ஆதலால் மாலை விட்டில் உண்டாகும் விருந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக; யானும், என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

Thirukkural in English - English Couplet:


O would my king would fight, o'ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

ThiruKural Transliteration:


vinaikalandhu vendreeka vaendhan manaikalandhu
maalai ayarkam virundhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore