திருக்குறள் - 678     அதிகாரம்: 
| Adhikaram: vinaiseyalvakai

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

குறள் 678 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vinaiyaan vinaiyaakkik koadal nanaikavul" Thirukkural 678 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும். (பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினையால் வினை ஆக்கிக் கோடல்-ஒரு வினையைச் செய்யும் பொழுதே அதனால் வேறுமொரு வினையை முடித்துக் கொள்ளுதல்; நனைகவுள் யானையால் யானை யாத்த அற்று-மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானையால் வேறுமொரு யானையைப் பிடித்துக் கட்டிய தொக்கும். உவமம் பெருவினை எளிதில் முடிவதைக் காட்டும். 'நனைகவுள்' என்பது 'வினையால்' என்பதற்கு எதுகை யாகவே வந்ததனால், 'நனைகவுள் யானை' என்பது களிறு என்னும் அளவாய் நின்றது. அல்லாக்கால், மதயானை பெண்யானையாலன்றி ஒருவகையிலும் அடக்கப்படாததாயும் ஒரு வினைக்கும் பயன்படாததாயும் இருக்குமாதலின், 'யானையால்யானை யாத்தற்று, என்னும் உவமை பொருந்தாதென்க. ஒரு கல்லில் இரு குருவியை வீழ்த்துவதும், ஒரு குண்டில் இரு புறாவைச் சுடுவதும் போல், ஒரு முயற்சியால் இருவினையை முடிக்கும் வகை இதனாற் சொல்லப்பட்டது. அதற்கேற்ப எண்ணிச் செய்க என்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்கின்ற ஒரு தொழிலினைக் கொண்டு பிறிதொரு தொழிலினையும் முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அப்படிச் செய்வது, மதம் பிடித்த யானை யொன்றினாலே மற்றுமோர் யானையினைப் பிடிப்பது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயல்படுபவர் செயல்படுவதிலிருந்து பிற செயல்களையும் செய்துகொள்வதை எண்ணிப் பார்க்கையில் யானையை பயன்படுத்தி யானையைப் பிடிப்பது தோன்றுகிறது.

Thirukkural in English - English Couplet:


By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

ThiruKural Transliteration:


vinaiyaan vinaiyaakkik koadal nanaikavuL
yaanaiyaal yaanaiyaath thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore