Kural 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

viyavaRka eGnGnaandrum thannai nayavaRka
nandri payavaa vinai.

🌐 English Translation

English Couplet

Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.

Explanation

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

2 மணக்குடவர்

எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக. செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.

3 பரிமேலழகர்

நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக. (தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - அறிவாற்றல்களிலும் இடம் பொருளேவல்களிலும் தான் மிகவுயர்ந்தபோதும் தன்னை மெச்சிச் செருக்குறா தொழிக; நன்றி பயவாவினை நயவற்க-தனக்கும் தன்நாட்டிற்கும் நன்மை தராத செயல்களை மானத்தினா லேனும் செருக்கினாலேனும் இன்பங்கருதியேனும் விரும்பா தொழிக. அரசன் தன்னை வியந்த விடத்து, காலம் இடம் வலிமுதலியன பற்றித் தன்னைப் பகைவருடன் ஒப்புநோக்கி ஏற்றத்தாழ்வறிய வாய்ப்பின்மையானும், அறமும் பொருளும் கவனிக்கப் படாமையானும், முற்காப்பும் விழிப்பும் இல்லாது போதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும்; தான் கருதியதை முடித்தே விடுவதென்னும் ஆணவத்தால் அறம் பொருளின்பம் பயவா வினைகளை மேற்கொள்ளின், அவற்றாற் கரிசும் (பாவமும்) பழியும் கேடுமே விளையுமாகலின் அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். தன்னைவியந்து கெட்டவர்க்குப் பொதுவியலில் வில்லிபுத்தூராழ்வாரும், வேத்தியலில் அரசு அதிகாரம் பூண்ட விசயநகர அமைச்சர் இராமராயரும் எடுத்துக் காட்டாவர்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

செருக்கினால் எப்போதும் தன்னைத்தானே மதித்துக் கொள்ளாதிருப்பாயாக; தனக்கு நன்மையினை உண்டாக்காத தொழில்களை மனத்தால் விரும்பாதிருப்பாயாக.

6 சாலமன் பாப்பையா

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

7 கலைஞர் மு.கருணாநிதி

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.

8 சிவயோகி சிவக்குமார்

தன்னைத் தானே எதன்பொருட்டும் வியப்பாக எண்ணாதே, நன்றிக் கெட்டச் செயல்களை எப்போதும் விரும்பாதே.

More Kurals from குற்றங்கடிதல்

அதிகாரம் 44: Kurals 431 - 440

Related Topics

Because you're reading about Removing Faults

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature