திருக்குறள் - 776     அதிகாரம்: 
| Adhikaram: pataichcherukku

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

குறள் 776 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vizhuppun pataadhanhaal ellaam vazhukkinul" Thirukkural 776 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நாளை எடுத்து - கடந்துபோன தன் வாழ்நாட்களையெல்லாம் எடுத்தெண்ணி; விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள், போரிற் சிறந்த புண்படாத நாட்களையெல்லாம் வீணாகக் கழித்த நாட்களோடு சேர்ப்பான் தூய பொருநன். விழுப்புண் மார்பிலும் முகத்திலும் பட்ட பெரும் புண். முதுகிற்பட்டது பழிப்புண். பொருநாளாயினும் விழுப்புண் பெறாநாள் வெறுநாளாகக் கருதுவான் என்பதாம். பொருநன் போர்மறவன். விழுப்புண் பெறாநாள் வீணாளாகவே, பெற்றநாள் மாணாள் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெற்றித் தழும்பு ஏற்படாத நாட்களை வீணாக கழித்த நட்களாக கணக்கிடுவார்கள் வீரர்கள்.

Thirukkural in English - English Couplet:


The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

ThiruKural Transliteration:


vizhuppuN pataadhanhaal ellaam vazhukkinuL
vaikkumdhan naaLai eduththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore