திருக்குறள் - 1204     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

குறள் 1204 - திருவள்ளுவர் - ThiruValluvar

"yaamum ulaengol avarnenjaththu en nenjaththu" Thirukkural 1204 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


எம் நெஞ்சத்து அவர் ஓஓ உளரே - எம்முடைய உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கின்றாரே! ; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அதுபோல யாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றேமோ, இல்லேமோ? தெரியவில்லையே! யாம் அவர் உள்ளத்திலிருந்தும் வினை முடியாமையால் வரவில்லையோ, அல்லது அது முடிந்தும் யாம் அவர் உள்ளத்தில் இல்லாமையால் வரவில்லையோ, என்பது கருத்து. ஓகாரம் ஈண்டுச் சிறப்புப் பற்றி இடைவிடாமை யுணர்த்தி நின்றது. இனி, வியப்புக் குறிப்பினது என்றுமாம். 'ஓஒ' இசைநிறை யளபெடை. 'கொல்' ஐயம். ஏகாரம் தேற்றம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நானும் உள்ளேனா ? அவரது நெஞ்சத்தில். என் நெஞ்சத்தில் அவர் உள்ளதைப் போல்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ?

Thirukkural in English - English Couplet:


Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He continues to abide in my soul, do I likewise abide in his ?.

ThiruKural Transliteration:


yaamum ulaengol avarnenjaththu en-nenjaththu
ohoh ulare avar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore