திருக்குறள் - 346     அதிகாரம்: 
| Adhikaram: thuravu

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

குறள் 346 - திருவள்ளுவர் - ThiruValluvar

"yaanena thennugn serukkaruppaan vaanoark" Thirukkural 346 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும். (மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும்யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தானல்லாத வுடம்பை நானென்றும் தனக்குப் புறம்பான பொருளை என தென்றும் கருதி அவற்றின்மேற் பற்று வைத்தற்கு ஏதுவான மயக்கத்தைக் கெடுப்பவன் ; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - விண்ணவர்க்குங் கிட்டாது மேற்பட்ட வீட்டுலகத்தை அடைவான். மேற்கூறிய இருவகைப் பற்றுந் துறப்பான் பெறும் பேறு இங்குக் கூறப்பட்டது. ஒருவன் இவ்வுலகில் இன்பம் நுகர்தற்கு நுகரும் உடம்பும் நுகரப்படும் பொருள்களும் வேண்டும். உடம்பு தன்னொடு சேர்ந்திருத்தலால் அகம் என்றும் , அதற்குப் புறம்பான மற்றப் பொருள்களெல்லாம் புறம் என்றும் சொல்லப்படும். இன்ப துன்ப வுணர்ச்சி யொற்றுமையாலும் ஒன்றெனக் கலந்த தோற்றத்தாலும் முக்கரணத் தொழிற் கருவியாதலாலும், ஒருவன் தன்னுடம்பைத் தானாக மயங்கி நானென்று சொல்வதால் அகப்பற்று நான் என்னும் சொல்லாலும், தனக்குச் சொந்தமான பிற பொருள்களையெல்லாம் தனித்தனி எனது என்று சொல்வதால், புறப்பற்று எனது என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். உடம்பு மேற்கூறிய மூவகையில் உயிரோடு ஒன்றியிருப்பதுடன், உடம்பின் நீடிப்பே உயிர் வாழ்க்கையும் உடம்பின் வலிமையே உயிர் வலிமையுமாதலால், ஒருவனுக்குப் புறப்பற்றினும் அகப்பற்றே விஞ்சியிருக்கும். நிலையாமையாற் சிறிது பொழுதே நுகரும் புறப் பொருளையும் நிலையானவுடமையாகக் கருதுவதால், அதுவும் மயக்கத்தின்பாற்பட்டதே. 'வானோர்க்கும்' என்னும் சிறப்பும்மை தொக்கது. வீட்டுலகத்தின் உயர்ச்சி பற்றியே அதை 'வரன் என்னும் வைப்பு' என்றார் முன்னும் ( 24 )

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நான் எனது என்ற ஆணவம் அழித்தவன் தேவர்களுக்கும் மேலான உலகத்தை அடைவான்.

Thirukkural in English - English Couplet:


Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.

ThiruKural Transliteration:


yaanena thennuGn serukkaRuppaan vaanoark
kuyarndha ulagam pukum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore