யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்.
Transliteration
yaaNtuchChendru YaanDum uLaraakaar vendhuppin
vaendhu saeRappat tavar.
🌐 English Translation
English Couplet
Who dare the fiery wrath of monarchs dread,
Where'er they flee, are numbered with the dead.
Explanation
Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
2 மணக்குடவர்
எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.
3 பரிமேலழகர்
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார். (இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
வெம்துப்பின் வேந்து செறப்பட்டவர்- கடுவலிமையுள்ள பேரரையனாற் சினக்கப்பட்டவர்; யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்- அவனுக்குத் தப்பி எங்குச் செல்லினும் எங்கும் உயிரோடிரார். வெம்மை தீப்போல அழித்துவிடும் கடுமை. வெந்துப்பின் வேந்தனுக்குப் பன்னாட்டிலும் அதிகாரமோ அச்சப்பாடோ சாய்காலோ இருக்குமாதலானும், அவனுக்குத் தப்பியோடியவர் எந்நாட்டுட் புகுந்தாலும் அந்நாட்டரசனால் கொல்லப்படுவதோ வேந்தனிடம் ஒப்புவிக்கப்படுவதோ உறுதியாதலானும்,'யாண்டுச் சென்றியாண்டு முளராகார்' என்றார். 'சென்றும்' என்னும் எச்சவும்மை தொக்கது. 'வேந்து' வேந்தன் என்பதன் மரூஉ. உம்மை முற்றும்மை.
5 சாலமன் பாப்பையா
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
7 சிவயோகி சிவக்குமார்
எங்குச் சென்றும் எப்படியும் வாழ முற்பட மாட்டார் மனம் கசந்து மன்னரால் விலக்கப்பட்டவர்.
8 புலியூர்க் கேசிகன்
பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர்பிழைத்திருக்கவே மாட்டார்கள்.
More Kurals from பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90: Kurals 891 - 900
Related Topics
Because you're reading about Not Offending the Great