"ikaledhir saaindhozhuka vallaarai yaarae" Thirukkural 855 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்? (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாது அதன் எதிரே வெள்ளத்து நாணல்போற் சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யாரே- வெல்ல முனையுந்தன்மையுடையார் யார்தான்? இகலெதிர் சாய்ந்தொழுகுதல் பொதுவாக எல்லார்க்கும், சிறப்பாக அரசர்க்கு, அரிதாகலின் 'வல்லாரை' என்றும், எல்லார்க்கும் நண்பராகின் வெல்லக் கருதுவார் இராராதலின் 'யாரே மிகலூக்குந் தன்மையவர்' என்றும், கூறினார். இம்மூன்று குறளாலும் இகலில்லார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. ஏகாரம் பிரிநிலை. மாந்தன் உள்ளத்தில் இயல்பானே தீக்கூறும் அதை எதிர்க்கும் நற்கூறும் இருத்தலின், இகலும் எதிர்சாய்தலும் இயல்வனவாம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
பகையுணர்வுக்கு எதிராக வாழும் ஒழுக்தில் வல்லவரை, யார் வெல்லும் தன்மை கொண்டவர் ?.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய பொழுது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர்.
Thirukkural in English - English Couplet:
If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?.
ThiruKural Transliteration:
ikaledhir saaindhozhuka vallaarai yaarae
mikalookkum thanmai yavar.