Kural 1180

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

maraiperal ooraarkku aridhandraal empoal
araiparai kannaar agaththu.

🌐 English Translation

English Couplet

It is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.

Explanation

It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

2 மணக்குடவர்

எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.

3 பரிமேலழகர்

('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது. '('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(காதலரை இவ்வூர் இயற்பழியாவாறு அவர் குற்றத்தை மறைக்க வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.) எம் போல் அறை பறை கண்ணார் அகத்து மறை பெறல்- எம்மைப் போலப் பறையறையும் கண்ணையுடையார் தம் நெஞ்சிலடக்கிய மறைபொருளை யறிதல் ; ஊரார்க்கு அரிது அன்று-இவ்வூர் வாழ்நர்க்கு எளிதாகும். யான் மறைக்கவும் என் கண்கள் வெளிப்படுத்தலின் மறைத்துப் பயனில்லை யென்பதாம். மறைக்கப்படும் பொருள் மறை ; ஆகு பெயர். பறையறைந் தறிவித்தாற் போலப் பலர்க்குந் தெரிவித்தலின் 'அறைபறை கண் என்றாள். "இங்ஙனஞ் செய்யுள் விகார மாக்காது, அறைபறை கண்ணாரென்று பாடமோது வாருமுளர்." என்றார் பரிமேலழகர். இனி, 'எம்போற் இன்னோசை குன்றாதும். மரபு திரியாதும் இலக்கணம் வழாதும் இருத்தல் காண்க. மோனை கெடுமேயெனின், அதனாலிழுக்கில்லையென்றும், மோனையில்லா ஈற்றடியே திருக்குறளிற் பெருவழக்கென்றும் , கூறிவிடுக்க 'ஆல்' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

7 சிவயோகி சிவக்குமார்

மறைத்து வைத்தல் ஊரார்க்கு அரியதாக இருக்கிறது என்றால் என்னைப் போன்ற வெளிப்படையாய் பறைசாற்றும் கண் பெற்றதே காரணம்.

8 புலியூர்க் கேசிகன்

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.

More Kurals from கண்விதுப்பழிதல்

அதிகாரம் 118: Kurals 1171 - 1180

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature