திருக்குறள் - 857     அதிகாரம்: 
| Adhikaram: ikal

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

குறள் 857 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mikalmaeval meypporul kaanaar ikalmaeval" Thirukkural 857 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்¢ததாகலின், 'மெய்ந்நூல'¢ எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இகல் மேவல் இன்னா அறிவினவர்- மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்- வெற்றியொடு பொருந்தும் அரசியலுண்மைகளை அறியமாட்டார். 'மெய்ப்பொருள்' தப்பாது வாய்க்கும் நெறிமுறைகள். 'இன்னா அறிவு' தமக்கும் தம்மைச் சார்ந்தவர்க்கும் தீங்கு விளைக்கும் அறிவு. இகலால் அகக்கண் மங்குதலால் 'காணார்' என்றார். இவ்விருகுறளாலும் இகலினார்க்கு வருந் தீங்கு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருமைக் கொள்பவர் மெய்ப்பொருளை காணாதவர் .பகைக் கொள்பவர் தீய அறிவுக் கொண்டவர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

ThiruKural Transliteration:


mikalmaeval meypporuL kaaNaar ikalmaeval
innaa aRivi navar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore