திருக்குறள் - 864     அதிகாரம்: 
| Adhikaram: pakaimaatchi

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

குறள் 864 - திருவள்ளுவர் - ThiruValluvar

"neengaan vekuli niraiyilan egngnaandrum" Thirukkural 864 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வெகுளி நீங்கான்-சினத்தை விடாதவனாகவும்; நிறை இலன் - அடக்கமில்லாதவனாகவு மிருப்பவன்மேற் செல்லுதல்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது-எக்காலத்தும் எவர்க்கும் எளிதாம். ’நிறை' மறை பிறரறியாவாறு மனத்தில் நிறுத்துதல் நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித்.133). சினத் தன்மையனாகவும் மறைவெளிப்படுத்துபவனாகவு மிருத்தலால், அவன்மேற் சென்று பொருது வெல்லுதற்குக் காலமும் இடமும் வலியுமறிந்து செல்லுதல் வேண்டாதாயிற்று. "இனி, இனிதென்று பாடமோதி அவன் பகைமை இனிதென்றுரைப்பாரு முளர்." என்று பரிமேலழகர் ஒரு பாடவேறுபாடு காட்டுவர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நீங்காத வெறுப்பும், நிறைவற்ற மனமும் உள்ளவனை, எக்காலத்திலும் எவ்விடத்திலும் யார் வேண்டுமானலும் வெற்றிகொள்வது எளிது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.

Thirukkural in English - English Couplet:


His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

ThiruKural Transliteration:


neengaan vekuLi niRaiyilan eGnGnaandrum
yaanganum yaarkkum eLidhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore