திருக்குறள் - 852     அதிகாரம்: 
| Adhikaram: ikal

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

குறள் 852 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pakalkarudhip patraa seyinum ikalkarudhi" Thirukkural 852 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகல் கருதிப் பற்றா செயினும் - ஒருவன் தன்னொடு கூடி வாழாமை கருதி வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னா செய்யாமை தலை- அவனொடு மாறுபாடு கொண்டு அவனுக்குத் தீயவற்றைச் செய்யாதிருத்தல் சிறந்ததாம். தீயன செய்யச் செய்யப் பகைமை மேன்மேல் வளர்தலாலும், அதனால் மனநோவும் உடல்நலக்கேடும் வாழ்நாட்குறைவும் மக்கள் அமைதிக் குலைவும் ஏற்படுதலாலும், அவற்றைச் செய்யாவிடின் அன்பும் அமைதியும் நிலவி இன்பும் பண்பாடும் வளர்ந்து வாழ்நாள் பெருகுதலாலும், 'இன்னா செய்யாமை தலை' என்றார். 'பற்றா', 'இன்னா' எதிர்மறைவினையாலணையும் பெயர்கள். உம்மை இழிவு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நடுநிலைமை கருதி விலகிவிடுதல் செய்தாலும், இகழ்வை கருத்தில்கொண்டு துன்பம்செய்யாமல் இருப்பதே முதன்மையானது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது!

Thirukkural in English - English Couplet:


Though men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

ThiruKural Transliteration:


pakalkarudhip patraa seyinum ikalkarudhi
innaasey yaamai thalai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore