Kural 1172

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

therindhunaraa noakkiya un-kan parindhunaraap
paidhal uzhappadhu evan.

🌐 English Translation

English Couplet

How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!.

Explanation

The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

2 மணக்குடவர்

முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தெரிந்து உணரா நோக்கிய உண்கண்-மேல் விளைவதை ஆராய்ந்தறியாது அன்று காதலரைக் காதலொடு நோக்கிநின்ற என் மையுண்ட கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன்-இன்று இது நம்மால் வந்ததுதானே! ஆதலாற் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று அன்போடு! கூறுபடுத்துணராது, துன்புற்று வருந்துவது ஏன்? துன்பம் வருமுன் காவாதார் அதுவந்தபின் வருத்துவது வீண்மடச்செய்கை யென்பதாம்.மேல் விளைவாவது பிரிவினுல் நேரும் ஆற்றாமைத் துன்பம்.

5 சாலமன் பாப்பையா

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.

6 கலைஞர் மு.கருணாநிதி

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.

7 சிவயோகி சிவக்குமார்

தெரிந்து உணராமல் பார்வையால் விழுங்கிய கண் கருணையின்றி அவசரமாய் அல்லல்படுவது ஏன்.

8 புலியூர்க் கேசிகன்

மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ?

More Kurals from கண்விதுப்பழிதல்

அதிகாரம் 118: Kurals 1171 - 1180

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature