Kural 878

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vakaiyaRindhu thaRseydhu thaRkaappa maayum
pakaivarkaN patta serukku.

🌐 English Translation

English Couplet

Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.

Explanation

The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

2 மணக்குடவர்

வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.

3 பரிமேலழகர்

வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வகை அறிந்து தற்செய்து தற்காப்ப-வினை செய்யும் வகையறிந்து அதற்கேற்பத் தன்னை வலிமைப் படுத்தித் தற்காப்புஞ் செய்துகொள்ளின் ; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - பகைவரிடத்துள்ள இறுமாப்புத்தானே நீங்கிவிடும். வினைசெய்யும் வகைகள் நால்வகை ஆம்புடைகளும் , பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய வலக்காரங்களும் , காலவிட வலி களறிந்து சூழ்தலும் , தும்பை யுழிஞை முதலிய போர்புரிதலும் முதலாயின. வலிமைப்படுத்தலாவது . பொருள் படைதுணைகளைப் பெருக்குதல் . தற்காத்தலாவது பல்வகையரணும் அமைத்துக் கொள்ளுதல் . இறுமாப்புத்தம்மை யெவரும் வெல்ல முடியா தென்றும் தாம்பிறரை எளிதாய் வெல்ல முடியுமென்றும் மகிழ்ந்திருத்தல் . இக்குறளாற் போர் செய்யாமலே பகைவரை விலக்கும் வகை கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.

7 சிவயோகி சிவக்குமார்

எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.

8 புலியூர்க் கேசிகன்

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

More Kurals from பகைத்திறந்தெரிதல்

அதிகாரம் 88: Kurals 871 - 880

Related Topics

Because you're reading about Knowing the Enemy

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature