Kural 872

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

villaer uzhavar pakaikoLinum koLLaRka
sollaer uzhavar pagai.

🌐 English Translation

English Couplet

Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!.

Explanation

Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

2 மணக்குடவர்

வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.

3 பரிமேலழகர்

வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வில் ஏர் உழவர் பகை கொளினும்-வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய பொருநரொடு பகை கொண்டாலும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க-சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞரொடு பகைகொள்ளா திருக்க. பொருநர்-போர்மறவர். சொல்லேருழவர்-புலவரும் அரசியலறிஞரான அமைச்சரும். பொருநர் உடல்வலிமையாற் செய்யுங்கேடு ஒரு சிலரையே தாக்கும். ஆயின், அறிஞர் சூழ்ச்சிவலியாற் செய்யுங்கேடு பல பெருநாடுகளையுந் தாக்கிவிடும், உம்மை எதிர்மறை, தாயைப் பழித்தாலுந் தண்ணீரைப் பழிக்கக் கூடாது. என்பது போன்றது இக்குறள். ஆதலால், இருசாராரையும் பகைத்துக்கொள்ளற்க என்பதே கருத்தாம். உழவே முதன்முதல் தோன்றிய மாந்தன் கைத்தொழிலாதலால், ஏனைத் தொழிலாளரையும் உழவராகவும் அவர் தொழில் கருவியை ஏராகவும் உருவகித்தார். தோண்டுதற் பொருள் கொண்ட தொள் என்னும் வினையடிப் பிறந்து பயிர்த்தொழிலை முதலிற்குறித்த தொழில் என்னும் சொல், இன்று தொழில் பொதுப்பெயராக வழங்கி வருவது கவனிக்கத்தக்கது. "The pen is mightier than the sword." என்னும் ஆங்கிலப் பழமொழி இக்குறட் கருத்ததே. காளமேகம் திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி பெய்வித்தது, நிறைமொழி மாந்தர் மனமொழி போன்றதாம். ஆயின், அமைச்சர் தம் சூழ்ச்சியால் விளைவிக்கும் கேடு, வில்லேருழவரான மறவர் வாயிலாக நிகழ்த்துவதே என வேறுபாடறிக. ஆகவே, அத்தகைய அமைச்சரைத் துணைக் கொண்ட அரசர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கரிகால்வளவனும் சேரன்செங்குட்டுவனும் போன்றாராயின் இருமடி வலியராதலால், அவரொடு பகை எக்கரணியத்தையிட்டுங் கொள்ளத்தக்க தன்றென்பது சொல்லாமலே பெறப்படும்.

5 சாலமன் பாப்பையா

விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

6 கலைஞர் மு.கருணாநிதி

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.

7 சிவயோகி சிவக்குமார்

கொலைக் கருவி கொண்டு வாழ்பவரை பகைத்துக் கொண்டாலும், சொல் கொண்டு வாழ்பவரை பகைக்க வேண்டாம்.

8 புலியூர்க் கேசிகன்

வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.

More Kurals from பகைத்திறந்தெரிதல்

அதிகாரம் 88: Kurals 871 - 880

Related Topics

Because you're reading about Knowing the Enemy

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature